மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை மற்றும் உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் பாஜக வெற்றிக்கு முஸ்லிம் வாக்குகளின் பிரிவு சாதகமாகி உள்ளது. மேலும், அக்கட்சிக்கு இந்துத்துவா மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) பிரச்சாரமும் கூடுதல் பலனை அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் முஸ்லிம் வாக்குகள் 12 சதவீதமாக உள்ளது. இங்குள்ள 288 தொகுதிகளில் 38-ல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். இந்த 38 தொகுதிகளில் பாஜக கடந்த 2019 தேர்தலில் 11 தொகுதிகளில் வென்றிருந்தது. இது தற்போது 2024-ல் எண்ணிக்கை கூடி 14 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதே 38 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது 2019-ல் 11-ல் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 2024-ல் இந்த எண்ணிக்கை குறைந்து 5 எம்எல்ஏக்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றுள்ளது. இதன் பின்னணியில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்காமலே, அவர்களது தொகுதிகளில் பாஜக வளர்வதைக் காட்டுகிறது.