மும்பை: மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், அதனால் சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளதாகவும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக சரத்பவார் அணி தலைவர் அறிவித்தார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையத்தையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக தேசியவாத காங்கிரசின் சரத் பவார் அணியின் தலைவர் பிரசாந்த் ஜக்தாப் தெரிவித்தார்.
மேலும் இவ்விசயம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. அடுத்தாண்டு டெல்லியில் சட்டப் பேரவை தேர்தல் நடப்பதால், இந்த தேர்தலிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது கவலையை வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தேர்தல் ஆணையம் செய்த மோசடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது’ என்று கூறினார்.
முன்னதாக, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளுடன் விபிபேட் வாக்குகளை எண்ணும் போது எவ்வித முரண்பாடும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திர விவகாரத்தில், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கும், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையிலான பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. அரியானாவில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், அங்கு மீண்டும் பாஜகவே ஆட்சியமைத்தது. அதேபோல் மகாராஷ்டிராவிலும் நடந்துள்ளது. அதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
The post மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி: சுப்ரீம் கோர்ட்டை அணுக ‘இந்தியா’ கூட்டணி முடிவு.! சரத்பவார் அணி தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.