மும்பை: அடுக்குமாடி குடியிருப்புகளைப் பெற போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்த வழக்கில், மகாராஷ்டிர வேளாண் அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாசிக் கோர்ட் தீர்ப்பளித்தது. பாஜ தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணியில் வேளாண்துறை அமைச்சராக உள்ளவர் மாணிக்ராவ் கோகடே. நாசிக் மாவட்டம் சினார் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். 1995ம் ஆண்டு இவர் மீது, 3 முறை எம்.எல்.ஏ-வும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான துக்காராம் டிகோலே ஒரு மோசடி வழக்கு தாக்கல் செய்தார். அதில், ஏழைகள் என்று கூறி நாசிக்கின் யோலேகர் மாலாவில் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நிர்மன் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை கோகடே சகோதரர்கள் பெற்றதாக குற்றம்சாட்டி யிருந்தார்.
இந்நிலையில், நாசிக் மாவட்ட கோர்ட்டில் 30 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், முதல்வரின் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் 2 குடியிருப்புகளை வாங்கியுள்ளனர். இதற்காக போலி ஆவணம் தயாரித்து ள்ளனர். இந்த வழக்கில் அமைச்சர் மாணிக்ராவ் கோகடே மற்றும் அவரது சகோதரர் சுனில் கோகடே ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்படுகிறது. மேலும் ரூ.50,000 அபராதமும், தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டனை பெற்ற மாணிக்ராவ் கோகடேவின் அமைச்சர் பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
The post மகாராஷ்டிரா வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவுக்கு 2 ஆண்டு சிறை: அடுக்குமாடி குடியிருப்பு பெற மோசடி செய்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.