புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில், புதிய முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் நேற்றிரவு டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.