உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், நீதி விசாரணை நடத்த உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று மவுனி அமாவாசை என்பதால் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்றுகூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட நள்ளிரவில் லட்சக்கணக்கானோர் கூடினர்.
அப்போது சாலையில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மூச்சு திணறி உயிரிழந்தனர். 17 மணி நேரத்திற்கு பின்னரே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 என உத்தரப் பிரதேச அரசு உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர்களில் 25 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு பிரயாக்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் செய்யப்படாததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் ஆளும் பாஜக அரசை கண்டித்து வருகின்றனர்.
இந்த சூழலில் விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த நீதிபதி ஹர்ஸ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு விபத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து உண்மையை கண்டறியும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்த காரணம் கண்டறிய 2 தனிப்படைகளை உத்தரப் பிரதேச காவல்துறை அமைத்துள்ளது.
The post மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன?.. நீதி விசாரணைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.