உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ‘அம்ரித் ஸ்நானம்’ நிகழ்ச்சியில் திரிவேணி சங்கமத்தில் 3.5 கோடி பேர் புனித நீராடியதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இங்கு கடந்த 2 நாட்களில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளது.
மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. இந்த விழா உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நடைபெறுகின்றன. பவுஸ் பூர்ணிமா தினத்தில் தொடங்கிய மகா கும்பமேளாவின் முதல் நாளில் புனித நீராடல் நிகழ்ச்சி தொடங்கியது. அன்றைய தினம் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மகர சங்கராந்தியின் 2-ம் நாளான நேற்று ‘அம்ரித் ஸ்நானம்’ என்ற முதல் முக்கிய புனித நீராடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நாக சாதுக்கள் தலைமையில் அக்காரா அமைப்பைச் சேர்ந்த சாதுக்கள் புனித நீராடினர். ஸ்ரீ பஞ்சாயத்தி அகாரா மகாநிர்வாணி, ஸ்ரீ ஷாம்பு பஞ்சாயத்தி அடல் அகாரா ஆகியோர் அம்ரித் ஸ்நானம் நிகழ்ச்சிய முதல் நபர்களாக புனித நீராடினர். அதைத் தொடர்ந்து சாதுக்களும், பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அம்ரித் ஸ்நானம் நிகழ்ச்சியில் 3.5 கோடி புனித நீராடியதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். கடந்த 2 நாட்களில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளது. மகா கும்பமேளாவை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், பிரயாக்ராஜில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.