டெல்லி: நாட்டு மக்களின் சமூக பொருளாதார நிலையை கண்டறிய இந்தியா முழுவதற்குமான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிஜு ஜனதாதளம் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குழு ஓபிசி நலனுக்கான நாடாளுமன்ற குழு தலைவர் கணேஷ் சிங்கை சந்தித்தது. அப்போது 2011ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் கிராம மற்றும் நகரங்களில் வாழும் குடும்பங்களின் சமூக பொருளாதார நிலைமையை கண்டறிவதாக தெரிவித்தனர்.
அதே சமயம் வளங்களை சரிசமமாக பிரித்து திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான ஜாதி அடிப்படையிலான தரவுகள் இல்லை எனவும் தெளிவு படுத்தினார்கள். ஜாதிய ரீதியிலான தரவுகள் மூலம் குடும்பத்தின் அமைப்பு வருமானத்திற்கான ஆதாரம் கல்வி தகுதி மற்றும் வேலை ஆகியவற்றை அறிய முடியும் எனவும் கூறினர். மேலும், ஒடிசா மாநிலத்தில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்புகளை தேசிய அளவிலான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அட்டவணையில் இணைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதன் மூலம் வரலாற்று ரீதியாக சமூக பொருளாதார தளத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஜாதிகள் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தனர். ஒடிசா மாநிலத்தில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் 231 வகுப்புகள் உள்ள நிலையில் அரசு வேலைவாய்ப்பில் 11.25 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் கல்வியில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post மக்களின் சமூக பொருளாதார நிலையை கண்டறிய இந்தியா முழுவதற்குமான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: பிஜு ஜனதாதளம் கட்சி வேண்டுகோள் appeared first on Dinakaran.