திருவனந்தபுரம்: நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே எனது முதல் லட்சியம் என்று இஸ்ரோ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணன் கூறினார். இந்திய விண்வெளி மைய (இஸ்ரோ) தலைவரான சோம்நாத் அடுத்த வாரம் ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக திருவனந்தபுரம் வலியமாலை திரவ உந்துவிசை இயக்க திட்ட தலைவராக இருக்கும் வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் மேலக்காட்டுவிளை. தந்தை வன்னியபெருமாள், தாய் தங்கம்மாள். வி.நாராயணன், குமரி மாவட்டத்தில் இருந்து இஸ்ரோ தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் 3வது நபராவார். மாதவன் நாயர், கே.சிவன் ஏற்கனவே இஸ்ரோ தலைவர்களாக இருந்தனர். இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.நாராயணன், தமிழ் முரசு நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: இஸ்ரோ தலைவராக என்னை தேர்வு செய்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இது மிக முக்கியமான பொறுப்பாகும். நான் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்து 41 ஆண்டுகள் ஆகிறது. திருவனந்தபுரம் வலியமலையில் உள்ள திரவ உந்துவிசை இயக்க திட்ட மைய தலைவராக கடந்த 7 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். எனது சொந்த ஊர் குமரி மாவட்டம் மேலக்காட்டுவிளை. அருகில் உள்ள கீழக்காட்டூர் அரசு பள்ளியில்தான் தமிழில் படித்தேன். எனது தந்தை வன்னியபெருமாள், தாய் தங்கம்மாள். தந்தை ஒரு சிறு வியாபாரி. காரக்பூர் ஐஐடியில் எம்டெக் மற்றும் பிஎச்டி படித்தேன். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே எனது முதல் லட்சியமாகும். இஸ்ரோ தலைவர், விண்வெளி ஆணைய தலைவர் மற்றும் விண்வெளி துறை செயலாளர் ஆகிய 3 முக்கிய பொறுப்புகள் எனக்கு உள்ளன. வரும் 14ம் தேதி தலைவராக பொறுப்பேற்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம்: புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி appeared first on Dinakaran.