இம்பால்: மணிப்பூரில் குக்கி இன மக்களின் போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி (எஸ்பி) உள்ளிட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர். அதனால் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்து அங்கு வசிக்கும் மெய்தி, குக்கி இன மக்கள் இடையே இனக்கலவரம் நிகழ்ந்து வருகிறது. வன்முறை நிகழ்வுகள் எதிரொலியாக கிட்டத்தட்ட 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில், நிருபர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் பைரன் சிங், மணிப்பூர் மாநில வன்முறை நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அதற்காக தாம் மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தார். அவரின் மன்னிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தற்போது மணிப்பூரில் மீண்டும் கலவரம் மூண்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை மர்ம கும்பல் ஒன்று தாக்கி சேதப்படுத்தி இருக்கிறது.
இந்த தாக்குதலை குக்கி இன கிளர்ச்சியாளர்கள் அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. மத்திய பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், கல்வீச்சிலும் இறங்கினர். மாவட்ட எஸ்பி அலுவலகம் மீது அவர்கள் கற்களை வீசி தாக்கியதில் அங்கு பணியில் இருந்த பலர் காயம் அடைந்தனர். உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் கடும் சேதம் அடைந்தன. இந்த திடீர் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்பி மனோஜ் பிரபாகர் காயம் அடைந்தார். அவருடன் பணியில் இருந்த மற்ற காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த அதே தருணத்தில் அங்குள்ள தெருக்களில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் பலர் நடமாடியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனவே அவர்கள் பல பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது. காயமடைந்த எஸ்பி மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட போலீசார், அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்போக்பி மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள குக்கி மற்றும் ஜோ சமூக மக்களிடையே, கடந்த செவ்வாயன்று மோதல் வெடித்தது.
இதையடுத்து, இரு குழுக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடியினர் ஒற்றுமைக்கான குழுவால், மாவட்டத்தில் 24 மணிநேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் தான் எஸ்.பி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
மணிப்பூர் காவல்துறை விளக்கம்
மணிப்பூர் காவல்துறை வெளியிட்டு அறிக்கையில், ‘பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்து, வன்முறை கும்பலைக் கலைக்க போதுமான பலத்தைப் பயன்படுத்தினார்கள். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காங்போக்பி எஸ்பி மருத்துவ சிகிச்சை பெற்று தற்போது நலமாக உள்ளார். கூட்டு பாதுகாப்பு படையினர் நிலைமையை சமாளித்து வருகின்றனர்.
ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்போக்பியில் நடந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில், அதிநவீன ஆயுதங்களை ஏந்திய நபர்கள், முகங்களை மூடியபடி உடைகளை அணிந்து தெருக்களில் செல்கின்றனர். அலுவலக வளாகத்தில் உள்ள வாகனங்கள் சேதப்படுத்தப்படுகிறது. அதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் பிரபாகர் காயமடைந்து தலையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட காவலர்களை வழிநடத்தி செல்லும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களை பகிரும் இணையவாசிகள், #IndiaUnderAttack எனும் ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
The post மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்பி படுகாயம்: தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடும் போலீஸ் appeared first on Dinakaran.