திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடைவதை முன்னிட்டு நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. 41 நாள் நீண்ட மண்டல காலம் டிசம்பர் 26ம் தேதி நடைபெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது.
இதன்பின் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. கடந்த ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் கடந்த மூன்று தினங்களாக சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இந்த நாட்களில் தினமும் சராசரியாக 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர்.
கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்றுடன் நெய்யபிஷேகம் நிறைவடைகிறது. நாளை (19ம் தேதி) இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மறுநாள் (20ம் தேதி) காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் இவ்வருட மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.
The post மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடைகிறது சபரிமலையில் நாளை இரவு வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.