புதுடெல்லி: கடந்த 2005ம் ஆண்டில் ஒன்றிய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த காலத்தில், வெளிநாட்டு மதுபான நிறுவனமான டியாகோ இந்தியாவில் மதுபானத்தை விற்பனை செய்வதற்கான இறக்குமதி அனுமதியை கோரியிருந்தது. அந்த நிறுவனத்துக்கு இறக்குமதி அனுமதியை பெற்று கொடுக்க ரூ.15ஆயிரம் அமெரிக்க டாலர்களை பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேற்கண்ட மனு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நீதிபதி காவேரி பவேஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “தற்போது வெளிநாட்டில் உள்ள கார்த்தி சிதம்பரம், இம்மாதம் 12ம் தேதி நாடு திரும்புகிறார். அவர் திரும்பியவுடன் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அப்போது சிபிஐ தரப்பில், “கார்த்தி சிதம்பரம் மீது தற்போதைய நிலையில் எந்த கைது நடவடிக்கையும் எடுக்க போவதில்லை.
இந்த வழக்கு விசாரணை தற்போது ஆரம்பகட்ட நிலையில் தான் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கு தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்போவதாக இருந்தால் மூன்று நாட்களுக்கு முன்னரே உரிய நோட்டீசை கார்த்தி சிதம்பரம் தரப்புக்கு சிபிஐ வழங்க வேண்டும். மேலும் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனுவை கார்த்தி சிதம்பரம் திரும்ப பெற்றார்.
The post மதுபான இறக்குமதி அனுமதி தொடர்பான வழக்கு முன்ஜாமீன் கோரிய மனுவை கார்த்தி சிதம்பரம் திரும்ப பெற்றார் appeared first on Dinakaran.