பிலாய்: மதுபான ஊழல் விவகாரம் தொடர்பாக சட்டீஸ்கர் மாஜி முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகேலின் பங்களாவானது பதும் நகரின் பிலாய்-3 பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு திடீரென 4 வாகனங்களில் அமலாக்கத்துறையினர் வந்தனர். அவர்கள் வீட்டில் இருக்கும் நபர்களிடம், தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வீடு முழுவதும் சோதனையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘நிலக்கரி ஊழல் மற்றும் மகாதேவ் பந்தய செயலி தொடர்பான வழக்குகள் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மீது நிலுவையில் உள்ளது. மகாதேவ் கிரிக்கெட் சூதாட்ட செயலி உரிமையாளர் சவுரப் சந்திரசேகர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது திருமணத்தை ஐக்கிய அரேபிய எமிரேட்டில் ஆடம்பரமாக நடத்தினார். இத்திருமணத்திற்கு மும்பை மற்றும் நாக்பூரில் இருந்து விருந்தினர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இத்திருமணத்திற்கு சவுரப் சந்திரசேகர் ரூ.200 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது.
மகாதேவ் கிரிக்கெட் சூதாட்ட செயலி மூலம் கிடைத்த பணத்தை ஹவாலா முறையில் இத்திருமணத்திற்கு செலவு செய்ததாகவும், சட்டீஸ்கர் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சவுரப் சந்திரசேகர் மீது ரூ.5,000 கோடி பண மோசடி புகார் உள்ளது. இவ்வழக்கில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதால், அதற்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன’ என்றன. மேலும் மதுபானக் கொள்கை விவகாரத்தில் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்தது. இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு சுமார் ரூ. 2,100 கோடிவரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பூபேஷ் பாகேல் மற்றும் அவருடன் ெதாடர்புடைய 14 இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்று வருகிறது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றைய ரெய்டு குறித்து பூபேஷ் பாகேல் அலுவலகம் வெளியிட்ட பதிவில், ‘கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வந்த பொய் வழக்கு, நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இன்று காலை முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பூபேஷ் பாகேலின் பிலாய் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மதுபான ஊழல் விவகாரம்; சட்டீஸ்கர் மாஜி முதல்வர் வீட்டில் ரெய்டு: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.