மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், புதிய நீதிமன்ற வளாகம் கட்டும் பணி, ரூ.166 கோடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை, 50 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை முடிக்க, பொதுப்பணித்துறை வேகம் காட்டி வருகிறது. மதுரையில் டாக்டர் அம்பேத்கர் சாலையில் மாவட்ட நீதிமன்றம் இயங்கி வருகிறது. இது, வழக்கறிஞர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் பி.டி.ராஜன் இருந்தபோது, 1972ல் 14 நீதிமன்றங்களுடன் துவங்கப்பட்டது. தற்போது, 42 நீதிமன்றங்களுடன் இயங்கி வருகிறது. மாவட்ட செசன்ஸ் நீதிபதிகள், கூடுதல் செசன்ஸ் நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், நீதிமன்ற ஊழியர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
இடநெருக்கடி மற்றும் புதிய நீதிமன்றங்கள் அதிக எண்ணிக்கையில் உருவானதால், அவற்றின் செயல்பாடுகளுக்கான இடவசதியில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் புதிதாக நீதிமன்றம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ரூ.230 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக 2023-2024ம் நிதியாண்டிலும், இரண்டாம் கட்டமாக 2024-2025 நிதியாண்டிலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு நிர்வாக ரீதியான ஒப்புதல் அளித்தது.
இதன்படி, ரூ.166 கோடி மதிப்பீட்டில் தற்போதுள்ள நீதிமன்றத்தின் பின்புறம் 3.39 லட்சம் சதுர அடியில், முதற்கட்டமாக, 18 நீதிமன்றங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள், கடந்தாண்டு டிசம்பரில் துவங்கியது. இத்திட்டத்திற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டிஒய்.சந்திரசூட், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதமானதால், இந்தாண்டு ஜனவரியில் புதிய நீதிமன்றத்தின் கட்டுமான பணிகள் துவங்கின. தற்போது வரை, 50 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி புதிய நீதிமன்றம் கட்டுமான பணிகள் திட்டப்படி, தரைதளத்தில் வங்கி, கேண்டீன், தபால் நிலையம் அமைகிறது. மேலும் 213 கார்கள், 315 டூவீலர்கள் நிறுத்துமிட வசதியுடன், பொதுமக்கள் சேவை சார்ந்த பல்வேறு வசதிகளும் அமைய உள்ளன. அடுத்ததாக முதல், இரண்டு, மூன்றாம் தளங்களில் நீதிமன்றங்களும், அவற்றிற்கான அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளும் அமையவுள்ள. இதன்படி ஒவ்வொரு தளத்திலும் ஆறு நீதிமன்றங்கள் அமைய உள்ளதுடன், நீதிபதிகளுக்கென வடக்கு பக்கத்தில் தனி நுழைவாயிலும், மற்ற பகுதிகளில் வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்கான நுழைவாயில்களும் அமைக்கப்பட உள்ளன. இவை தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக சாய்தள வசதியும் அமையவுள்ளது.
இந்த புதிய மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில், அனைத்து அறைகளும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் உருவாக்கப்படுகிறது. மேலும் கோர்ட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்ல ஏழு லிப்ட்களும், நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க ஒரு எம்எல்டி அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் கட்டப்படவுள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘தற்போதைய கட்டுமான பணிகள் முடிந்ததும், அவற்றின் மேல் இரண்டாம் கட்டமாக 12 நீதிமன்றங்கள் கட்டுவதற்கு, அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. அதிகபட்சம் 9 தளங்கள் வரை கட்டும் விதமாக, கட்டிடத்திற்கான அஸ்திவாரம் மிகவும் உறுதித்தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் கூடுதல் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், தற்போது உருவாகும் கட்டிடத்தின் ேமல் பகுதியில் தேவையான தளங்களை அமைக்கலாம். தற்போது நடைபெறும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்படி மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்து, புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்,’’ என்றனர்.
The post மதுரையில் பல்வேறு வசதிகளுடன் ரூ.166 கோடியில் உருவாகும் புதிய மாவட்ட நீதிமன்றம்: கட்டுமான பணிகளில் விறுவிறுப்பு appeared first on Dinakaran.