போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் விமானப்படை விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மிரேஜ்-2000 ரக போர் விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அந்த விமானம் அப்பகுதியில் உள்ள ஒரு வயலில் விழுந்து நொறுங்கியது. பின்னர் விமானம் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த நிர்வாக அதிகாரிகளும் விமானப்படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 2 இருக்கைகள் கொண்ட போர் விமானத்தில் இருந்த விமானிகள் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சியின்போது விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்த விமானிகள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க விமானத்தை காலியான பகுதியில் தரையிறக்க முயன்றதால் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்தான காரணம் இன்னும் வெளியாகவில்லை. போர் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக ராஜஸ்தானின் பார்மரில் விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த விமானி பாதுகாப்பாக உயிர் தப்பினார். தற்போது மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் விமானப்படை விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் விமானப்படை விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது appeared first on Dinakaran.