போபால்: மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்சல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சிந்த்வாரா பகுதி சந்தையானது 21 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியிலுள்ள சந்தையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளதால், அங்கிருந்த பறவைகள், பூனைகளின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் அங்கிருந்த 3 பூனைகள், ஒரு பறவைக்கு ஏவியன் இன்ப்ளூயன்சா (எச்5என்1) எனப்படும் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வகை காய்ச்சலானது கடந்த 2022ல் அமெரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து சிந்த்வாரா சந்தையானது அடுத்த 21 நாட்களுக்கு மூடப்படும் என்று ஒன்றிய சுகாதாரத்துரை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிந்த்வாரா பகுதி கால்நடைத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் டாக்டர் எச்ஜிஎஸ் பக்ஸ்வார் கூறும்போது, ‘கடந்த ஜனவரி இறுதியில் அந்த பூனைகள், பறவைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போபாலில் உள்ள ஆய்வக சோதனைகள் இதை உறுதி செய்கின்றன. இதையடுத்து சிந்த்வாரா பகுதி சந்தையை மூடுவதற்கு உத்தரவிட்டோம். பறவைக் காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த பறவைகள், பூனைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டன.
கால்நடை மருத்துவர்கள், சந்தையில் பணிபுரியும் நபர்களிடமிருந்து பெறப்பட்ட 65 மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டன. மேற்படி நபர்கள் யாருக்கும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.
The post மத்திய பிரதேசத்தில் பூனை, பறவை மூலம் பரவிய பறவை காய்ச்சலால் சந்தை மூடல்: ஒன்றிய அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.