பெங்களூரு: மனைவியைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வைத்த பெங்களூரு ஐடி நிறுவன ஊழியரை புனேவில் வைத்து போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் ராஜேந்திர கெடேகர் (37) – கவுரி அனில் (32) தம்பதி கடந்த 2 மாதங்களாக பெங்களூரு தொட்டகம்மனஹள்ளியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. பெங்களூருவில் ஐடி நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராக ராகேஷ் பணியாற்றும் நிலையில், ஏற்கனவே ஊடக நிருபராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட கவுரி அனில் வேலை தேடியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
கடந்த 26ம் தேதி அன்றும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த சண்டையின்போது ஆத்திரமடைந்த ராகேஷ், மனைவி கவுரி அனிலை கத்தியால் குத்தியதில் கவுரி உயிரிழந்தார். கவுரியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு பெரிய சூட்கேசில் அடைத்து, அதை இழுத்துச்சென்று குளியலறையில் வைத்துவிட்டு, புனேவிற்கு ராகேஷ் தப்பிச் சென்றார். மறுநாள், பெங்களூருவில் தாங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரை தொடர்புகொண்டு, மனைவி கவுரியை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து பாத்ரூமில் வைத்துள்ளதாக தகவல் கொடுத்தார்.
உடனடியாக அவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு சென்ற ஹுலிமாவு போலீசார், கவுரி அனிலின் சிதைக்கப்பட்ட உடல் பாகங்களை மீட்டனர். அவரது உடல் பாகங்களை தடயவியல் குழுவினர் பரிசோதித்தனர். மனைவியை கொலை செய்துவிட்டு புனேவிற்கு தப்பியோடிய ராகேஷ், அங்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். விஷம் குடித்த ராகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் அடுத்தகட்டமாக நடத்தப்படும் விரிவான விசாரணையில் கொலைக்கான காரணம் மற்றும் முழு விவரம் தெரியவரும். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் ராகேஷ், பெங்களூருவிற்கு அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
* சடலத்துடன் பேசிக்கொண்டிருந்த ராகேஷ்
ராகேஷிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. மகாராஷ்டிராவில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பெங்களூரு வந்த கவுரி அனில் வேலை கிடைக்காமல் இருந்ததால், கணவர் ராகேஷிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். மீண்டும் மகாராஷ்டிராவிற்கே செல்ல வேண்டும் என்று கவுரி வலியுறுத்த, ஆனால் அதற்கு ராகேஷ் மறுக்க, இருவருக்கும் இடையே அவ்வப்போது இதுதொடர்பாக சண்டை நடந்திருக்கிறது. கடந்த 26ம் தேதி இரவு உணவிற்கு முன்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டபோது, ராகேஷ் கவுரியை அடிக்க, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கவுரி கோபத்தில் ராகேஷ் மீது வீசினார். இதில், ராகேஷுக்கு சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது. கோபத்தில் அந்த கத்தியை வைத்தே கவுரியை ராகேஷ் குத்தியதில் கவுரி உயிரிழந்திருக்கிறார். கவுரி உயிரிழந்ததும், அன்று இரவு முழுவதும் மனைவி கவுரி அனிலின் உடல் அருகே அமர்ந்து ராகேஷ் பேசியதாக விசாரணையில் தெரியவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post மனைவியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைத்த கணவன் கைது: பெங்களூருவில் பரபரப்பு appeared first on Dinakaran.