முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி நேற்று அஞ்சலி செலுத்தியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில்,’ மன்மோகன்சிங் இந்தியாவின் அரசியலில், பொருளாதார நிபுணத்துவத்தில் ஒரு உயர்ந்த மேதையாக இருந்தார். அவருடைய பங்களிப்பு நாட்டை மாற்றியமைத்தது. உலகளவில் அவருக்கு மரியாதை அளித்தது. இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பியாக அவர் இருந்தார்.
ஒப்பிடமுடியாத தொலைநோக்கு பார்வையுடன், அவர் சீர்திருத்தங்களைத் தொடங்கினார். கட்டுப்பாடுகள் நீக்கம், தனியார்மயமாக்கல், அன்னிய முதலீட்டை ஊக்குவித்ததன் மூலம், அவர் இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். அவரது பணியின் கீழ், இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்தது. இதுவே அவரது புத்திசாலித்தனம் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும். மேலும் அவர் இந்தியாவின் 13வது பிரதமராக அமைதியான உறுதியுடனும், ஞானத்துடனும் நாட்டை வழிநடத்தினார்.
2008ல் உலக நிதி நெருக்கடியின் சவால்களின் மூலம் இந்தியாவை அதன் மோசமான விளைவுகளில் இருந்து பாதுகாத்து, தேசத்தை வழிநடத்தினார். கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், கல்வி உரிமை, இந்திய-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் போன்ற குறிப்பிடத்தக்க முயற்சிகளை அவரது தலைமை கண்டது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம், விவசாய கடன் தள்ளுபடி, கடன் நிவாரணத் திட்டம், 93வது அரசியலமைப்புத் திருத்தம், பட்டியலின சாதிகள், பழங்குடியினர், ஓபிசிக்களுக்கான சமூக நீதியை மேம்படுத்தியது.
வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ), பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக வன உரிமைச் சட்டம் கொண்டு வந்தார். இந்தியா அதிகபட்ச ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை அடைய பங்களித்தார். சாதாரண மனிதனின் நலனில் அவர் கவனம் செலுத்தி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்த இரக்கமுள்ள, சீர்திருத்தவாத தலைவராக அவரது ஆட்சி என்றென்றும் இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
ஒரு அரசியல்வாதியாக அவரது பங்களிப்புகளுக்கு அப்பால், ஒரு மரியாதைக்குரிய கல்வியாளராக, பொருளாதார நிபுணராக அவரது வாழ்க்கை இந்தியாவின் கொள்கைகள் மற்றும் திசையை வடிவமைக்க உதவியது. பொருளாதார நிபுணராக அவரது அறிவார்ந்த பணி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களில் அவர் செய்த சேவை, பல பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடித்தளம் அமைத்தது. அவரது வாழ்க்கையும் பணியும் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைத்தது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவரது படத்திற்கு காரியக்கமிட்டி உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
* மன்மோகன் சிங் எனது நண்பர் தத்துவவாதி, வழிகாட்டி: சோனியா
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி கூறுகையில்,’ ஞானம், மேன்மை, பணிவு ஆகியவற்றின் உருவகமாக இருந்த ஒரு தலைவரை கட்சி இழந்துவிட்டது. தேசிய வாழ்க்கையில் ஒருபோதும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்கிறார். மன்மோகன் சிங் போன்ற ஒரு தலைவர் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகள் அளவிட முடியாதவை என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள நாங்களும், இந்திய மக்களும் என்றென்றும் பெருமையடைவோம், நன்றியுள்ளவர்களாக இருப்போம். ஏனெனில் நம் நாட்டிற்கு முழு மனதோடு சேவை செய்தார். அவரது கருணையால், அவரது விரிவான பார்வையால் கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வுக்கு அதிகாரம் கிடைத்தது. தூய்மையான இதயம் மற்றும் சிறந்த மனதுக்காக இந்திய மக்களால் நேசிக்கப்பட்டார்.
உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் மற்றும் அறிஞர்களால் மதிக்கப்பட்டு, போற்றப்பட்ட அவர், அபாரமான ஞானம், அந்தஸ்து கொண்ட ஒரு அரசியல்வாதியாகப் போற்றப்பட்டார். அவர் வகித்த ஒவ்வொரு உயர் பதவிக்கும் புத்திசாலித்தனத்தையும் தனித்துவத்தையும் கொண்டு வந்தார். மேலும் அவர் இந்தியாவுக்கு பெருமையையும், மரியாதையையும் கொண்டு வந்தார். என்னைப் பொறுத்தவரை, மன்மோகன் சிங்கின் மரணம் ஆழ்ந்த தனிப்பட்ட இழப்பு. அவர் எனது நண்பர், தத்துவவாதி, வழிகாட்டி. அவர் தனது நடத்தையில் மிகவும் மென்மையாக இருந்தார். ஆனால் அவரது ஆழ்ந்த நம்பிக்கைகளில் மிகவும் உறுதியானவர். சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான அவரது அர்ப்பணிப்பு ஆழமானது, அசைக்க முடியாதது’ என்று தெரிவித்தார்.
The post மன்மோகன்சிங் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் தலைவிதியை மாற்றியது: காங்கிரஸ் காரியக்கமிட்டி புகழாரம் appeared first on Dinakaran.