டெல்லி : போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களை செயல்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லை ஒட்டி உள்ள மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில், முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த சூழலில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவசர கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.
அதில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ், அவசரகால அதிகாரங்களை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போர்க்கால கொள்முதலுக்கான விதிகளை செயல்படுத்தவும் பொது மக்களை பாதுகாக்கும் வகையில், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த ஒரு முன் அனுமதியும் பெற வேண்டிய அவசியமும் இல்லை என்றும் மருந்துகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து கொள்முதல்களும் இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, அத்தியாவசிய பொருட்களை கருப்பு சந்தையில் பதுக்கி வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் உள்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளது. விலைவாசி உயராமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post மருந்துகள், உணவு தானியங்களுக்கான கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.