புதுடெல்லி: ‘மார்பகங்களை பிடிப்பது பாலியல் குற்றமாகாது’ என்ற சர்ச்சைக்குரிய அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், உணர்ச்சியில்லையா, மனிதாபிமானம் இல்லையா? என கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021ம் ஆண்டு பைக்கில் லிப்ட் தருவதாக அழைத்து சென்ற இளைஞர்கள் 2 பேர், மறைவான இடத்தில் வைத்து, சிறுமியின் மார்பை பிடித்து, பைஜமாவை அவிழ்த்துள்ளனர். சிறுமி கூச்சலிடவே மக்கள் திரண்டதையடுத்து, 2 இளைஞர்கள் தப்பி ஓடினர்.
சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா கடந்த 17ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ‘‘சிறுமியின் மார்பகத்தை பிடித்தது, ஆடையை அவிழ்த்ததை தவிர பாலியல் வன்கொடுமைக்கான எந்த ஆதாரமும் இல்லை. சிறுமி நிர்வாணமாக்கப்படவில்லை. இளைஞர்களும் அவ்வாறு இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை. மார்பகத்தை பிடித்தது, ஆடையை அவிழ்த்தது மட்டும் பாலியல் வன்கொடுமையாக கூறிவிட முடியாது’’ என்றார். இது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்று, ஒன்றிய அரசு, உபி அரசு மற்றும் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இது மிகவும் தீவிரமான விஷயம். நீதிபதியின் முழு உணர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது. தீர்ப்பு ஒத்திவைத்து 4 மாதங்களுக்கு பிறகு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் நீதிபதி அவசரமாக அளித்த தீர்ப்பல்ல. இது மனிதாபிமானமற்ற அணுகுமுறை. நீதிபதிக்கு எதிராக இதுபோன்ற கடினமான வார்த்தைகளை பயன்படுத்த நாங்கள் வருந்துகிறோம். எனவே இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கிறோம். இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எடுத்து விசாரித்து உரிய முடிவு அறிவிக்க வேண்டும். இந்த வழக்கு மீண்டும் 2 வாரத்திற்கு பிறகு விசாரிக்கப்படும்’’ என உத்தரவிட்டனர்.
The post ‘மார்பை பிடிப்பது பாலியல் குற்றமல்ல’அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை: உணர்ச்சி, மனதாபிமானம் இல்லையா? என நீதிபதிக்கு கடும் கண்டனம் appeared first on Dinakaran.