பெங்களூரு: மியான்மர் நாட்டில் மாண்டலே நகருக்கு அருகே கடந்த 28ம் தேதி 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக் உள்ளிட்ட பிற நகரங்களிலும் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் மாண்டலே, சாகைங் நகரங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. ராணுவ ஆட்சி காரணமாக பாதிப்பு நிலவரம் முழுமையாக அறியப்படாத நிலையில் தற்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பூமியை படம் பிடிப்பதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய கார்டோசாட்-3 செயற்கைகோள் மியான்மரின் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை எடுத்துள்ளது. இந்த புகைப்படங்களை இஸ்ரோ நேற்று வெளியிட்டது. அதில் நிலநடுக்கத்திற்கு முந்தைய நிலையும், பாதிப்புக்கு பிறகான நிலையும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ விடுத்த அறிக்கையில், நிலநடுக்கத்தால் மாண்டலே மற்றும் சாகைங் நகரில் பல புத்த வழிபாட்டு தலங்களும், மடாலய கட்டிடங்களும் சேதமடைந்திருப்பதை காட்டி உள்ளது. மேலும் இன் வா நகரில் இராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அவா பாலம் இடிந்திருப்பதும் புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. பல சாலைகளில் ஏற்பட்ட பிளவுகள் உள்ளிட்ட பயங்கர சேதங்கள் இஸ்ரோ புகைப்படம் மூலம் அறிய முடிகிறது.
* பலி 2,719 ஆக அதிகரிப்பு
இதற்கிடையே, 4வது நாளாக மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் மியான்மர் நிலநடுக்க பலி எண்ணிக்கை 2,719 ஆக நேற்று அதிகரித்தது. காயமடைந்தோர் எண்ணிக்கை 4,500 ஆக உயர்ந்துள்ளது. 400க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக மியான்மர் ராணுவ அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
The post மியான்மர் நிலநடுக்கம் குறித்த இஸ்ரோ செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியீடு appeared first on Dinakaran.