நைப்பியிதோ: மியான்மரில் பூகம்பமும், அதன் தாக்கத்தால் தாய்லாந்தில் கடும் நில அதிர்வும் ஏற்பட்ட நிலையில், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மியான்மரில் இதுவரை 20 பேரும், பாங்காக்கில் 3 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மியான்மரை இன்று இரண்டு பூகம்பங்கள் தாக்கியதில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கெனவே ராணுவ ஆட்சியின் கீழ் இருந்துவரும் மியான்மரில் பல பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக நில நடுக்கங்கள் பதிவாகின. இந்த பூகம்ப பாதிப்புகள் அண்டை நாடான தாய்லாந்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பல இடங்களில் பாதுகாப்பு கருதி பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.