சென்னை மாகாண முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்ற அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இடைத்தேர்தல் வந்தது. இதில் ஆட்சியில் இருந்த ராஜாஜி, இந்தத் தேர்தலில் எப்படியாவது காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்று முனைப்பு காட்டினார். காங்கிரஸ் சார்பில் இளம்பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது பெயர் எனக்கு நினைவில் இல்லை… தேர்தல் களம் பரபரப்பாகக் காணப்பட்டது.
இருந்தபோதும் அந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில் வெற்றியும் பெற்றார் . அருப்புக்கோட்டை தொகுதியில் 40 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்தார்கள். அதில் எதிர்த்து நின்ற பார்வார்டு பிளாக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் பெற்றது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியால் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது என்பதையெல்லாம் முன்னரே பார்த்தோம்…