திருமலை: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் கிருஷ்ணமுரளி நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணைமுதல்வர் பவன்கல்யாண் ஆகியோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து தேர்தல் நேரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரும், நடிகருமான போசானி கிருஷ்ணமுரளி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெலுங்குதேசம், ஜனசேனா கட்சியினர் மாநிலம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் கிருஷ்ணமுரளியை ஐதராபாத்தில் ராஜம்பேட்டை போலீசார் கடந்த 28ம்தேதி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று போசானி கிருஷ்ணமுரளிக்கு திடீரென இடது கை மற்றும் நெஞ்சு பகுதியில் வலி இருப்பதாக கூறியதால் உடனடியாக அவரை ராஜம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறை அதிகாரிகள் சேர்த்தனர். அங்கு நடந்த பரிசோதனையில், போசானி கிருஷ்ணமுரளிக்கு எவ்வித உடல்நல பிரச்னையும் இல்லை என டாக்டர்கள் கூறினர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
போசானி கிருஷ்ணமுரளிக்கு உடல்நிலை பாதித்ததாக வந்த தகவலையடுத்து சிறை அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு இசிஜி மற்றும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்றனர்.
The post முதல்வர் குறித்து அவதூறால் கைது சிறையில் நடிகருக்கு நெஞ்சுவலி..? ஆந்திராவில் பரபரப்பு appeared first on Dinakaran.