இம்பால்: மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் நேற்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாஜ ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 மே 3ம் தேதி மெய்டீஸ், நாகா, குக்கி சமூகத்தினரிடையே பயங்கர இனக்கலவரம் வெடித்தது. இந்த இனக்கலவரத்தில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து விட்டனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நீடிக்கின்றன.
ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இனக்கலவரம் நீடிக்கும் நிலையில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது, “மணிப்பூரில் நடந்த இனக்கலவரத்துக்கு மணிப்பூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். கடந்த கால தவறுகளை மன்னித்து, மறந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் மணிப்பூரில் புத்தாண்டு தினமான நேற்றே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
காங்போங்பி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளை சேர்ந்த தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், இம்பால் மேற்கு மாவட்டத்தில் தாழ்வாக உள்ள கடங்பண்ட் கிராமத்தின் மீது நேற்று அதிகாலை 1 மணியளவில் பயங்கர ஆயுதங்களை கொண்டும், குண்டுகளை வீசியும் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆயினும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் அச்சத்தில் வேறுஇடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
* ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
இதனிடையே, பிஷ்னுபூர், தவுபால் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிஷ்னுபூர் மாவட்டம் தோங்கோங்லா கிராமத்தில் நடந்த தேடுதல் பணியில், ஒரு எஸ்எல்ஆர், ஒரு மேகசின், ஒரு .303 துப்பாக்கி, இரண்டு 9எம்எம் பிஸ்டல், ஒரு டெட்டனேட்டர், நான்கு கைக்குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் ஷீஷாங்தெம் இகோப்பாட் பகுதியில் இருந்து மூன்று 9எம்எம் பிஸ்டல், கைக்குண்டுகள், துப்பாக்கி, வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே இம்பால் கிழக்கு மாவட்டம் பெங்காலி கிராசிங் அருகே மந்திரிபுக்ரி பஜாரில் மிரட்டி பணம் பறித்த தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
The post முதல்வர் மன்னிப்பு கேட்ட நிலையில் மணிப்பூரில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் appeared first on Dinakaran.