
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1971-ம் ஆண்டு போரின்போது பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மாணவர்கள் கடந்த 2024 ஜூன், ஜூலையில் பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.போராட்டத்தை அடக்க அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நடந்த போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் சுமார் 1,400 மாணவர்கள் உயிரிழந்தனர். 25,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 2024 ஆகஸ்டில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. தலைநகர் டாக்காவில் உள்ள நாடாளுமன்றம், பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு ஆகிய இடங்களை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

