புதுடெல்லி: தற்போது பரவுவது தீவிரமான கொரோனா இல்லை என்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் தலைவர் டாக்டர் ராஜீவ் பாஹ்ல் கூறினார். சமீபத்தில் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஜேஎன்.1 உள்ளிட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 1000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிற நோய் பாதிப்புக்கு ஆளான 10 பேர் கொரோனா தொற்றுக்கு பின்னர் இறந்துள்ளனர். இருப்பினும், இந்த பாதிப்புகள் பெரும்பாலும் லேசான அறிகுறிகளுடன் இருப்பதாகவும், மருத்துவமனை அனுமதியளிக்க வேண்டிய சூழலோ அல்லது கடுமையான நோய்க்கும் வழிவகுக்கவில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் (ஐசிஎம்ஆர்) ராஜீவ் பாஹ்ல் கூறினார்.
ெகாரோனா தடுப்பூசிகள் கடுமையான நோய் பாதிப்புகளைத் தடுப்பதில் திறம்பட செயல்படுவதாகவும், மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார். அரசு மற்றும் சுகாதாரத் துறை, தொற்று பரவலை கண்காணிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதியவர்கள் மற்றும் நீரிழிவு அல்லது இதய நோய் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும், முகமூடி அணியவும், மக்கள் கூடும் இடங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு பாசிட்டிவ் மாதிரியும் மரபணு வரிசைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறது.
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஆனால் பீதியடையத் தேவையில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ெதளிவுபடுத்தினார். இந்தியாவில் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது தொற்று பரவல் குறைவாகவே உள்ளது. குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், முந்தைய கொரோனா அலைகளில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். பள்ளிகள் மூலம் தொற்று பரவுவதைத் தடுக்க, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது முக்கியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்; இப்போது பரவுவது தீவிர கொரோனா இல்லை: ஐசிஎம்ஆர் தலைவர் பேட்டி appeared first on Dinakaran.