புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய அளவிலான நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை என்று கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேப்போன்று இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், கேரள மாநிலத்தை சேர்ந்த மேத்யூ நெடும்பாரா என்பவர் உட்பட மொத்தம் ஐந்து வழக்கறிஞர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக புதிய மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில்,” வயநாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட பேரிடரை கருத்தில் கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து மெற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு ரீதியாக ஆய்வு எப்போது கடைசியாக மேற்கொள்ளப்பட்டது. அணை பலமாக உள்ளதா என்பது தொடர்பாக ஒன்றிய அரசின் நிபுணர் குழுவிடம் கருத்தை கேட்டு, அணையை கட்டமைப்பு ரீதியாக ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க இந்த விவகாரத்தில் அறிவுறுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை ஏதேனும் உள்ளதா என்பதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம். அதேப்போன்று இதற்கு முன்னதாக அணையை ஆய்வு செய்த நிபுணர் குழுவில் இடம் பெற்ற நபர்களின் தன்மையையும் அறிய வேண்டியுள்ளது. என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பிற்பபிக்கப்பட்ட உத்தரவில், ‘‘அணை பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ள படி, அணை பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை கொண்டு தேசிய குழு அமைக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த குழு ஒன்றிய அரசால் அமைக்கப்படவில்லை.இது தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. அதில் அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய அளவிலான நிபுணர் குழு ஏன் அமைக்கப்படவில்லை என்பதற்கான விரிவான விளக்கம் இருக்க வேண்டும். அதேப்போன்று தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும் நிபுணர்கள் குழு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும். குறிப்பாக இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
The post முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய அளவிலான நிபுணர் குழு ஏன் அமைக்கவில்லை?; ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.