மூணாறு: மூணாறில் பலத்த மழையால் பேரழிவு துயர சம்பவம் நிகழ்ந்து தற்போது 101 ஆண்டுகள் கடந்துவிட்டது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள மூணாறு வனம் மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிக மழை கொட்டித் தீர்க்கும். கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். அதிக மழைப்பொழிவு காலங்களில் இங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இருப்பினும், 1924ம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவு மறக்க முடியாத வடுவாக அமைந்துவிட்டது. மூணாறில் பருவ மழை சராசரியாக 400 முதல் 450 செ.மீ. வரை பெய்யும். ஆனால் 1924ம் ஆண்டு ஜூலை மாதம் மட்டும் 591.3 செ.மீ., மழை கொட்டி தீர்த்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. ஜூலை 14ல் தொடங்கிய சாரல் மழை பின்னர் வலுவடைந்து 3 வாரங்களுக்கு கொட்டித்தீர்த்தது.
இதில் தேயிலை எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்தன. பல எஸ்டேட் பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள் மண்ணில் புதைந்ததில் சுமார் 110 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மூணாறு அருகே மாட்டுபட்டி, பெரியவாரை பகுதிகளில் மலைகளுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டு மரங்கள், கற்கள் ஆகியவை சிக்கி திடீரென இயற்கை தடுப்பணைகள் உருவாகின. அது திடீரென உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மூணாறு நகரமே வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தது. தற்போதுள்ள ஹெட்ஒர்க்ஸ் அணை அருகே மலைக்குன்று இடிந்து விழுந்தது. இதனால் மூணாறு பாகத்தில் இருந்து வரும் தண்ணீர் செல்ல வழியின்றி போனதும் நகரம் நீரில் மூழ்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ஜூலை 18ம் தேதி மாலை மூணாறு மரைக்கார் கட்டிடம் வெள்ளத்தில் மூழ்கியது.
இதேபோல, குண்டளை பகுதிகளிலும் புதிய தடுப்பணை உருவாகி உடைந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. தேயிலை தோட்டங்களை நிர்வகித்த ஆங்கிலேயர்கள் சரக்குகளை கையாள பயன்படுத்திய மூணாறு – டாப் ஸ்டேஷன் இடையே இயக்கப்பட்ட குண்டளைவாலி ரயில் பாதை மற்றும் ரயில்வே ஸ்டேஷன் ஆகியவை இருந்த இடம் தெரியாத அளவிற்கு முற்றிலும் சேதமடைந்தன. பல தேயிலை தொழிற்சாலைகள், குடியிருப்புகள், தொலை தொடர்பு வசதி, மின்கம்பங்கள் சேதமடைந்தன. மாங்குளம் பகுதியில் கரிந்திரி மலை சரிந்ததில் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா – மூணாறு சாலை துண்டிக்கப்பட்டது. இந்த துயர சம்பவம் நிகழ்ந்து தற்போது 101 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனை மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்த பேரழிவுக்கு பின்புதான் மூணாறில் இருந்து கேப்ரோடு வழியாக போடிமெட்டுக்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. 1931ல் மூணாறில் இருந்து நேரியமங்கலம் வழியாக புதிய சாலை அமைக்கப்பட்டது. சேதமடைந்த ரயில் தண்டவாளங்களை ஆங்கிலேயர்கள் மின்கம்பங்களாக பயன்படுத்தினர். அவை மூணாறு மற்றும் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் இன்றளவும் சாட்சியங்களாக உள்ளன. மலையாள மாதம் கொல்ல வருடம் 1099ல் இந்த பேரழிவு நடந்துள்ளதால் இதை `99ல் பிரளயம்’ என்றும் கூறுகின்றனர்.
The post மூணாறு பிரளயம் நிகழ்ந்து 101 ஆண்டுகள் நிறைவு: மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட துயர சம்பவம் appeared first on Dinakaran.