டெல்லி: இந்தியாவில் சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது; இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான தொலைக்காட்சிகளின் 80 சதவீத உதிரிப் பாகங்கள் சீனாவிலிருந்து வருகின்றன. மேக் இந்தியா என்ற பெயரில், நாம் ஒன்றுகூடி உற்பத்தி செய்கிறோமே தவிர உண்மையிலேயே தயாரிக்கப்படவில்லை. ஐபோன்கள் முதல் டிவி வரை தயாரிக்கத் தேவையான பாகங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. நாம் அவற்றை ஒன்றாக இணைக்கிறோம்.
சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆதரவான கொள்ளை இல்லாததும், அதிக வரிகளும், நாட்டின் தொழில்துறையை கார்போரெட் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது. இந்தியா உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வரை வேலைவாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் மேக் இன் இந்தியா பற்றிய பேச்சுகள் வெறும் பேச்சுகளாகவே இருக்கும். இந்தியா உண்மையான உற்பத்தி சக்தியாக மாறுவதற்குச் சீனாவுடன் சமமாக போட்டியிடுவதற்கும் அடிமட்ட அளவில் மாற்றம் தேவை.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, மோடி அரசின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கை மீட்டெடுக்கத் தவறிவிட்டது என்றும், இது 2014 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3 சதவீதத்திலிருந்து 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் மிகக் குறைவு என்றும் ராகுல் குற்றம் சாட்டினார்.
கடந்த பத்து ஆண்டுகளாக சீனா பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் ஆகியவற்றில் பணியாற்றி வருவதாகவும், இந்தத் துறையில் இந்தியாவை விட குறைந்தது பத்து ஆண்டுகள் முன்னிலை வகிப்பதாகவும் அவர் கூறினார். உலகம் தொழில்நுட்ப, பொருளாதார புரட்சியின் விளிம்பில் நிற்கும்போது, வளர்ச்சி, உற்பத்தி மற்றும் பங்கேற்புக்கான புதிய பார்வை இந்தியாவுக்குத் தேவை என்று அவர் கூறினார்.
The post மேக் இன் இந்தியா என்ற பெயரில் ஒன்றுகூடுகிறோமே தவிர உற்பத்தி செய்யவில்லை: ராகுல் காந்தி appeared first on Dinakaran.