கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 7 மாத குழந்தை பலாத்கார குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம், 76 நாட்களில் விசாரணையை முடித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்தாண்டு நவம்பர் 30ம் தேதியன்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த புர்டோலா பகுதியை சேர்ந்த கோஷ் என்பவர், அதேபகுதியை சேர்ந்த 7 மாத குழந்தையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 65 (2), 140 (4), 137 (2), 118 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இவ்வழக்கு பாங்க்ஸ்ஹாலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த டிச. 30ம் தேதி போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுற்ற நிலையில், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்திரிலா முகர்ஜி அளித்த தீர்ப்பில், ‘ஏழு மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற கோஷ் குற்றவாளி என்பது உறுதியாகிறது. அவர் மீது 65 (2), 140 (4), 137 (2), 118 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுகிறது. குற்றம் சாட்டப்பட்ட கோஷூக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படுகிறது’ என்று தீர்ப்பளித்தார். 7 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம், கொலை செய்ய முயற்சி, கடத்தல் ஆகிய குற்றங்களை செய்த கோஷ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்ட 76 நாட்களில் கொல்கத்தா போலீசார் அவருக்கு தண்டனை பெற்று தந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை, கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த ஜனவரி 7ம் தேதி தொடங்கிய பரிசோதனையானது 40 நாட்களில் முடிக்கப்பட்டது. சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த ஆறு மாதங்களில் மேற்குவங்க மாநில நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட ஏழாவது மரண தண்டனை இதுவாகும். முன்னதாக கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா காவல்துறையின் தன்னார்வலர் சஞ்சய் ராயை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது குறிப்படத்தக்கது.
The post மேற்குவங்கத்தில் நடந்த கொடூரம்; 7 மாத குழந்தையை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை: 76 நாட்களில் விசாரணையை முடித்து அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.