புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. 24ஆயிரத்து 640 ஆசிரியர் பணியிடங்களுக்கு 23லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 25ஆயிரத்து 753 பேருக்கு பணி நியமன ஆணையை அரசு வழங்கியது. இந்த ஆசிரியர் பணிநியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் 25,753பேரின் பணி நியமனத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 127 பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘‘தேர்வின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மை நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது. முழு தேர்வு செயல்முறையும் மோசமானது மற்றும் களங்கமானது.
2024ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி 25753 பேரின் பணி நியமனங்களை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகின்றது. மனிதாபிமான அடிப்படையில் சில மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு அவர்கள் பணியில் நீடிப்பார்கள். அரசு மூன்று மாதங்களில் புதிய தேர்வு செயல்முறையை தொடங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
The post மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர்கள் பணிநீக்கம் உறுதி: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.