*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நெல்லை : மேலப்பாளையம் பகுதியில் பாளையங்கால்வாயில் தூர்வாரி கரையோரங்களில் வைக்கப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாவட்டம் மேலச்செவல், பழவூர் பகுதியில் தாமிபரணி ஆற்றில் இருந்து பாளையங்கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கோபாலசமுத்திரம், தருவை, முன்னீர்பள்ளம் வழியாக நெல்லை மாநகர் மேலப்பாளையம், சந்தனம்மாள்புரம் பாளை, கோட்டூர் வழியாக பாளை அரியகுளம் சானான்குளத்தில் முடிவடைகிறது.
மாநகர பகுதியான மேலப்பாளையம் பகுதியில் பாளையங்கால்வாய் நுழைவதில் இருந்து சக்கடை கழிவுகள், பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷன் கழிவுகள் கால்வாயில் கலந்து தற்போது தண்ணீர் மாசுபடுகிறது. கோடைகாலம் என்பதால் பாளையங்கால்வாயில் தண்ணீர் அடைக்கப்பட்டுள்ளது.
கால்வாய் முழுவதும் கட்டிட இடிபாடுகள், குப்பைகள், அமலை செடிகள், வேலிகாத்தான் செடிகள் நிரம்பி காணப்படுகின்றன. பாளையங்கால்வாயில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசனபரப்பு ஒரு காலத்தில் இருந்தது. இது பல்வேறு காரணங்களால் பாசனபரப்பு குறைந்து விட்டது.
இந்நிலையில் பாளையங்கால்வாயில் நிரம்பி காணப்படும் குப்பைகள், அமலை செடிகளை நெல்லை தனியார் கண் மருத்துவமனை சார்பில் சமூக பொறுப்பு நிதியின் கீழ் கடந்த மாதம் 25ம் தேதி தூய்மை படுத்தும் பணி நடந்தது.
தூய்மை பணியின் போது மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் முதல் சந்தனம்மாள்புரம் பகுதிவரை பாளையங்கால்வாயில் தூய்மை பணி நடந்தது. இப்பணியில் கால்வாயில் காணப்படும் குப்பைகள் ஜேசிபி மூலம் அகற்றும் பணி நடந்தது.
மேலும் கரைகளில் அடர்ந்து வளர்ந்து காணப்பட்ட முட்செடிகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. தற்போது கால்வாயில் இருந்து அகற்றப்பட்ட குப்பைகள், முட்செடிகள் உள்ளிட்டவைகள் கரைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கால்வாயில் இருந்து அகற்றப்பட்ட குப்பைகளை கரையில் குவித்து வைப்பதால் மீண்டும் அவைகள் கால்வாயில் விழுந்துவிடும். ஆகவே திட்ட நோக்கம் திசைமாறி சென்றுவிடும். எனவே கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட குப்பைகளை கரையில் இருந்து லாரிகள் மூலம் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post மேலப்பாளையம் பகுதியில் பாளையங்கால்வாய் கரையில் குவித்து வைக்கப்பட்ட குப்பைகள் அகற்றப்படுமா? appeared first on Dinakaran.