ஜெய்ப்பூர்: மோசமான வானிலை காரணமாக நள்ளிரவில் ஜெய்ப்பூருக்கு உமர் அப்துல்லா சென்ற விமானம் திருப்பி விடப்பட்டது. டெல்லி விமான நிலையம் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, நேற்று ஜம்முவிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தார். அவரது விமானம், டெல்லி விமான நிலையத்தில் நிலவிய சூழல் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.
இதனால், அவர் நள்ளிரவு வரை ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் சிக்கியிருந்தார். இதுகுறித்து உமர் அப்துல்லா தனது சமூக வலைதளத்தில் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் விமானத்தின் படிக்கட்டுகளில் நின்று கொண்டிருப்பது தெரிகிறது. அவரது பதிவில், ‘டெல்லி விமான நிலையம் மிகவும் மோசமான குழப்பத்தில் உள்ளது. ஜம்முவிலிருந்து புறப்பட்டு மூன்று மணி நேரமாக வானில் விமானம் பறந்து கொண்டிருந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு ஜெய்ப்பூருக்கு நாங்கள் வந்த விமானம் திருப்பி விடப்பட்டது.
இப்போது நள்ளிரவு 1 மணிக்கு விமானப் படிக்கட்டுகளில் நின்று புதிய காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறேன். இங்கிருந்து எப்போது புறப்படுவோம் என்று எனக்கு தெரியவில்லை’ என்று பதிவிட்டிருந்தார். உமர் அப்துல்லாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பல பயனர்கள் டெல்லி விமான நிலையத்தின் தயார்நிலை குறித்து கேள்விகளை எழுப்பினர். சிலர் மோசமான வானிலையை காரணமாக கூறினாலும், பலர் விமான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு குறைபாடுகளை விமர்சித்தனர்.
இருப்பினும், டெல்லி விமான நிலைய ஆணையம் அல்லது தொடர்புடைய விமான நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. மோசமான வானிலை அல்லது ஓடுபாதை நெரிசல் காரணமாக உமர் அப்துல்லா வந்த விமானம் திருப்பி விடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
The post மோசமான வானிலையால் நள்ளிரவில் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்ட உமர் அப்துல்லா விமானம்: டெல்லி விமான நிலையம் குறித்து விமர்சனம் appeared first on Dinakaran.