டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, பல நாடுகளுக்கு பயணிக்கு பிரதமர் ஏன் மணிப்பூருக்கு செல்லவில்லை என கேள்வி எழுப்பினார். இந்தி திணிப்பு குறித்து பேசிய அவர், எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் என்ற பாரதிதாசனின் கவிதையை கூறி ஆவேசமாக பேசினார். வைகோ பேசியதாவது;
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள், படுகொலைகள் மற்றும் கொடுமைகள் தொடர்கின்றன. எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதை தவிர வேறு என்ன வேலை இருக்கிறது என்பதுதான். பி.எம் என்றால் பிரதமர். ஆனால் பிரதமர் மோடியை பொறுத்தவரை பி.எம். என்றால் பிக்னிக் மினிஸ்டர். அனைத்து நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் பிரதமர் மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
வைகோவின் பேச்சை குறிக்கிட்டுப் பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர், அரசியலமைப்பு பதவியில் இருக்கும் மோடி குறித்த விமர்சிப்பது அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று தெரிவித்தார். அதற்கு வைகோ, யாருக்கும் நான் அஞ்ச மாட்டேன். நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன் என்று கூறினார். இதனிடையே, பிரதமரை விமர்சிக்க நீங்கள் யார்? என்று பாஜகவினர் கோஷமிட்ட நிலையில், நான் வைகோ, அண்ணா இயக்கத்தில் இருந்து வந்தவன் நான் என பதிலளித்த வைகோ திடீரென,
எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!
எப்பக்கம் புகுந்து வந்துவிடும் இந்தி
எத்தனை பட்டாளம் கூட்டிவரும்?
கன்னங் கிழிந்திட நேரும் – வந்த
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் என முழங்கினார். இந்த நாடாளுமன்றத்தில் எனக்கு 24 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அரசின் புதிய கல்விக் கொள்கையை குப்பையில் வீச வேண்டும். புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதனை எதிர்த்து திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்டங்களை நடத்தி வருகிறார். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் என்றும் ஏற்கமாட்டோம். இவ்வாறு வைகோ பேசினார்.
The post மோடி பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர்.. கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்!! appeared first on Dinakaran.