புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் என்ற போட்டி நிலவி வருகின்றது. விரைவில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகத் தேர்தலை சந்திக்கின்றன.
இதனிடையே, பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை 2 பகுதிகளாக ஏற்கெனவே வெளியிட்டுவிட்டது. இந்நிலையில் 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.