வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். 2013-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி 266-வது போப் ஆக அவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் தொகுப்பு இது…
பல நூற்றாண்டுகள் பழமையான கோட்பாட்டை மாற்றியமைக்காமல், மிகவும் இரக்கமுள்ள கத்தோலிக்க திருச்சபையை உருவாக்கிய சீர்திருத்த தலைவராக போப் பிரான்சிஸ் வரலாற்றில் இடம் பிடிப்பார். மக்களின் போப் ஆண்டவராக விளங்கியவர் பிரான்சிஸ். இவர் இந்த பெயரை தேர்ந்தெடுத்ததிலேயே அவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார். தனது செல்வத்தைத் துறந்து ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த 13-ஆம் நூற்றாண்டின் மறைபொருள் அசிசியின் புனித பிரான்சிஸ் நினைவாக பிரான்சிஸ் என்ற பெயரைப் பெற்ற முதல் போப் இவராவார்.