புதுடெல்லி: ரயில்வே ஊழல் வழக்கில் இருந்து லாலு, ராப்ரி, தேஜஸ்வியை விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு எதிராக சிபிஐ ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் மூன்று பேருக்கும் எதிராக குற்றவியல் சதி, மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபணமானால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது லாலு, ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி யாதவ் சார்பில் ஊழல் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி நீதிபதியிடம் கோரிக்கை மனு சமர்பிக்கப்பட்டது.
மேலும் மூன்று பேரும் நீதிபதியிடம், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் உள்நோக்கம் கொண்டவை என்றும் குறிப்பிட்டனர். இந்த வழக்கில் தங்களுக்கு எதிராக சிபிஐயிடம் எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The post ரயில்வே ஊழல் வழக்கில் இருந்து லாலு, ராப்ரி, தேஜஸ்வியை விடுவிக்க கோரி மனுத்தாக்கல் appeared first on Dinakaran.