டெல்லி: மக்களவையில் வக்பு வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், வக்பு வாரிய சொத்துகளை முறைகேடாக அபகரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழு பல்வேறு திருத்தங்களுடன் மசோதாவையும், தனது அறிக்கையையும் ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில் ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 4-ந் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வக்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த வாரத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில் காங்கிரஸ் ஆலோசனை நடத்துவது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
The post ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.