சென்னை: மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வருத்தம் தெரிவித்ததையடுத்து, உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்தது. தனது ராஜினாமா அறிவிப்பையும் திரும்பப் பெறுவதாக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையேயான பனிப்போர் அண்மையில் நடைபெற்ற மதிமுக தொழிலாளரணி கூட்டத்தில் வெளிப்பட்டது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் வகையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்கும் முன் முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, “உட்கட்சி விவகாரத்தை வீடியோ எடுத்து வெளியிட்டு, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது அவர் தான். கட்சிக்கு அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிடக் கூடாது” என்றார். இதேபோல், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “நான் வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அவர் முகம் பதித்த மோதிரம் அணிந்திருப்பதே அடையாளம்” என கூறியிருந்தார்.