புதுடெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் 33 பேரிடம் ரூ.3 கோடியை, விருதுநகர் அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர் மூலமாக பணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக ரவீந்திரன் என்பவர் சார்பில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் 2021ம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்து 2022ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து ரவீந்திரன் என்பவர் இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறையின் வாதத்தை ஏற்க மறுத்து, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி கடந்த மாதம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன், விஜய நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கி கடந்த 28ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘இந்த வழக்கில் ஆளுநர் தரப்பில் இருந்து ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது என ஆளுநரின் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கே.டி.ராஜேந்திரபாலாஜி விவகாரத்தில் புலன்விசாரணை முடிந்துள்ள நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆளுநர் காலம் தாழ்த்தியதற்காக எங்கள் அதிகாரிகள் கையிலிருந்து வழக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆளுநருக்கு அனுப்பபட்டுள்ளன. குற்றப்பத்திரிக்கை தாக்கலாகி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சில அம்சங்கள் தொடர்பாக மீண்டும் விசாரணை நடைபெற்றது . பிரிவு 17ன் கீழ் அனுமதி நடவடிக்கை கோரப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
அதன் பின்னர் விசாரணை அடிப்படையில் பிரிவு 19ன் கீழ் கோரப்பட்ட அனுமதி நடவடிக்கை கோப்புகள் இன்னும் ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளது. மேலும் ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைகள் தொடர்பான கோப்புகள் மொழிமாற்றம் தேவைப்படுவதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ஆளுநர் தரப்பு கூறியுள்ளது. ஆளுநரின் காலதாமத்திற்காக மாநில காவல்துறையிடம் இருந்து வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் தவறுக்காக நாங்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும் ?. விசாரணை முடிந்துள்ள நிலையில் மீண்டும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவது தேவையற்றது’ என்று தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாரிஸ்குமார்,’இந்த வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக புலன்விசாரணை நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. தற்போது வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. அப்படி என்றால் மீண்டும் வழக்கு முதலில் இருந்து விசாரிக்கப்படும். இது என்ன வேடிக்கை. அப்படியெனில் கடந்த நான்கு ஆண்டு நடைபெற்ற விசாரணயின் நிலை என்ன ?. புலன் விசாரணை முடிவுற்ற பிறகு எப்படி இவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கோப்புகளை இரண்டு வாரத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில், ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சி.பி.ஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதிக்கிறது. அதேப்போன்று இரண்டு வாரத்தில் தமிழ்நாடு அரசு மொழி பெயர்ப்பை வழங்கியதும், உடனடியாக ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post ராஜேந்திர பாலாஜி தொடர்பான விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை: காலதாமதமின்றி முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உத்தரவு appeared first on Dinakaran.