டெல்லி: ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் 2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.டி.ராஜேந்திரபாலாஜி தன் மீதான சி.பி.ஐ விசாரணைக்கு தடைகோரிய மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஆளுநர் தரப்பு தாமதப்படுத்துவதாக நீதிபதிகள் கருத்து
இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், எஸ்.வி.என்.பாட்டில் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட கோப்பு மீதான நிலை என்ன?. ஆளுநருக்கு அனுப்பிய கோப்பின் நிலை என்ன என்பது பற்றி ஆளுநர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கோப்புகள் மொழிமாற்றம் தேவைப்படுவதால் கூடுதல் அவகாசம் தேவை என ஆளுநர் தரப்பில் கூறியது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆளுநர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர். இதை அடுத்து நீதிபதிகள் பேசுகையில், நீங்கள் இந்த விவகாரத்தை தாமதப் படுத்துகிறீர்கள் என ஆளுநர் தரப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மொழிபெயர்ப்பு கேட்பதன் மூலம் ஆளுநர் தரப்பில் மேலும் தாமதப்படுத்தும் முயற்சி என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு
கே.டி.ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் புலன் விசாரணை முடிந்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். ஆளுநர் காலம் தாழ்த்தியதற்காக எங்கள் அதிகாரிகள் கையிலிருந்து வழக்கு மாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடிந்த நிலையில் சிபிஐ விசாரணை தேவையற்றது?
இந்த விவகாரத்தில் ஏற்கனவே விசாரணை முடிந்துள்ள நிலையில் ஏன் சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதற்காக வேறு தரப்பின் தவறுக்காக நாங்கள் பொறுப்பேற்க வேண்டும். குற்றப்பத்திரிகை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒரு செய்தி அரசுக்கு, ஆளுநர் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என ஆளுநர் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். அந்த ஆவணத்தில் உள்ள சில விவரம் தமிழிலும், சில ஆங்கிலத்திலும் உள்ளது என தமிழ்நாடு அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி வழக்கு – ஆளுநர் முடிவெடுக்க ஆணை
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி வழக்கில் அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் 2 வாரத்தில் முடிவெடுக்க ஆணையிட்டது. மேலும், ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கோப்புகளை 2 வாரத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மொழி பெயர்த்து தந்ததும் ரஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்க ஆணையிட்டதுடன். இந்த இடைப்பட்ட காலத்தில், ராஜேந்திர பாலாஜி வழக்கில் சி.பி.ஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
The post ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் 2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு..!! appeared first on Dinakaran.