பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. 26 அப்பாவிகளை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இதற்கென தனி பயிற்சி அளிக்கப்பட்டதற்காக ஆதாரங்கள் சிக்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கையில் முதல் கட்டமாக, எல்லைகள் மூடல், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கு அளிக்கப்பட்ட விசா ரத்து, அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற உத்தரவு, தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைப்பு என்று அதிரடி காட்டியுள்ளது இந்திய அரசு. பதிலுக்கு, சிம்லா ஒப்பந்தம் ரத்து, எல்லை மூடல், இந்தியர்கள் வெளியே உத்தரவு, பாகிஸ்தான் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை, இந்தியாவுடன் வர்த்தகம் நிறுத்தம் என்று பதில் நடவடிக்கை எடுத்துள்ளது பாகிஸ்தான். தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களை தேடி கண்டுபிடித்து கற்பனைக்கு எந்த தண்டனை கொடுப்போம் என்று பிரதமர் மோடி கர்ஜித்துள்ளார்.
காஷ்மீரில் இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி முகாம், அதிகாரிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர் ஆலோசனை என்று அடுத்தடுத்த நகர்வுகள், பாகிஸ்தான் மீது எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற பரபரப்பை உருவாகி உள்ளதன. இது குறிப்பிட்ட சில தீவிரவாத முகாம்கள் மீதான சர்ஜிகல் ஸ்டிரைக்கா? அல்லது முழு அளவிலான போரா? என்று விவாதங்கள் தொடங்கி உள்ளன. இரு நாட்டு ராணுவம், விமானப்படை, கடற்படைகள் உச்ச கட்ட உஷார் நிலையில் இருக்கின்றன. போர் மூண்டால் யாருக்கு படை பலம் அதிகம், ஆயுத பலம் அதிகம், அதிக வலிமை கொண்ட நாடு எது என்பது தொடர்பான ஒப்பீடு இதோ…
சக்தி வாய்ந்த ராணுவம்
ராணுவ பலத்தை பொறுத்தவரை உலகின் 145 நாடுகளின் தர வரிசை பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா உலகின் 4வது சக்திவாய்ந்த ராணுவம் என்ற இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளன. இதில் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி 12வது இடத்தில் உள்ளது.
வீரர்கள் பலம்
வீரர்கள் பலத்தை பொறுத்தவரை இந்திய ராணுவத்தில் 14,55,440 வீரர்கள் உள்ளனர். இது தவிர 25.27 லட்சம் துணை ராணுவத்தினர், 11.55 லட்சம் ரிசர்வ் படையினர் இருக்கின்றனர். ஆனால், பாகிஸ்தானிடம் 6.54 லட்சம் வீரர்கள் மட்டுமே உள்ளனர். துணை ராணுவத்தினர் 5 லட்சம்பேரும், ரிசர்வ் படையினர் 5.5 லட்சம் வீரர்கள் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நேரடி போர் என்றால் பாகிஸ்தான் வீரர்கள் சில நாட்களில் இந்தியாவிடம் தோற்பது உறுதி.
பீரங்கிகள்
இந்தியாவிடம் 4,201 பீரங்கிகள் இருக்கின்றன. அதே நேரத்தில் பாகிஸ்தான் 2,627 பீரங்கிகளை வைத்துள்ளது. காவச வாகனங்களை பொறுத்தவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மலைக்குள் மடுவுக்கு இடையேயான வித்தியாசம். 1,48,594 கவச வாகனங்களை இந்தியா வைத்துள்ளது. பாகிஸ்தானிடம் இருப்பதோ 17,516தான். நேரடி போரில் கவச வாகனங்களின் பங்கு அதிகம் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். பாகிஸ்தானை விட இந்தியாவிடம் எட்டரை மடங்கு அதிக கவச வாகனங்கள் இருக்கின்றன.
ஏவுகணை
இந்தியாவிடம் 5,200 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் அக்னி5 ரக ஏவுகணைகள் தவிர குறுகிய தூரம் சென்று தாக்கும் பிருத்வி, பிரம்மோஸ் ரக ஏவுகணை இருக்கின்றன. பாகிஸ்தானில், 2,750 கி.மீ வரை செல்லும் ஷாஹீன் 3 ரக ஏவுகணைகள் மட்டுமே இருக்கின்றன.
அணு ஆயுதங்கள்
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அணுஆயுதங்களை வைத்துள்ளன. எதிரிநாடுகளை அச்சுறுத்தும் நோக்கில் இந்த அணுகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியா வசம் 180 அணு குண்டுகளும், பாகிஸ்தானிடம் 170 அணு குண்டுகளும் உள்ளன.
விமானப்படை
போர் விமானங்கள் எண்ணிக்கையிலும் இந்தியாவுக்கு தான் முதலிடம். இந்தியாவிடம் 2,229 போர் விமானங்களும், 513 பைட்டர் ரக விமானங்களும் உள்ளன. இந்தியா வசம் ரபேல், சுகாய்-30 எம் கே ஐ ரக நவீன விமானங்கள் இருக்கின்றன. பாகிஸ்தானில் 1,399 போர் விமானங்களும், 328 பைட்டர் விமானங்களும் இருக்கின்றன. ஜெஎப் 17, எப் 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வைத்துள்ளது. விமான பலத்திலும் பாகிஸ்தான் பின் தங்கியே இருக்கிறது. அதே போல், இந்தியாவிடம் 899 ஹெலிகாப்டர்களும், பாகிஸ்தானிடம் 373 ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன.
கடற்படை
கடற்படை பலத்தை பொறுத்தவரையிலும் இந்தியாதான் டாப். 293 கப்பல்களுடன் இந்தியா உலகின் 6வது பெரிய கடற்படையாக திகழ்கிறது. 121 கப்பல்கள் வைத்துள்ள பாகிஸ்தான் கடற்படைக்கு இந்த பட்டியலில் 27வது இடம்தான். இந்தியாவிடம் 2 விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. இதனால், கடலில் இருந்து விமானங்களை அனுப்பி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது எளிது. பாகிஸ்தானிடம் விமானம் தாங்கி கப்பல் ஒன்றுகூட இல்லை என்பது குறிப்பிட தக்கது. இந்தியாவிடம் 13 நாசகாரி ரக கப்பல்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானிடம் அது போன்ற கப்பல் எதுவுமே இல்லை. நீர் மூழ்கி கப்பல்களை பொறுத்தவரை இந்தியாவிடம் 18ம், பாகிஸ்தானிடம் வெறும் 8ம் தான் இருக்கின்றன.
ஆள் பலம், ஆயுத பலம் என்று அனைத்திலும் இந்தியா தான் டாப். இன்றைக்கு போர் மூண்டாலும் பாகிஸ்தானை துவம்சம் செய்யும் பெரும் பலத்துடன் இந்திய முப்படைகள் தயாராக உள்ளன.
The post ராணுவம், விமானப்படை, கடற்படை; இந்தியா VS பாகிஸ்தான் யாருக்கு என்ன பலம்? appeared first on Dinakaran.