டெல்லி : பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்த நிலையில், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அனைத்து ஊடக சேனல்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் இந்திய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்வதையோ அல்லது லைவ் அறிக்கைகளை வெளியிடுவதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அடிப்படை தகவல்களை வெளியிடுவது ராணுவ செயல்பாட்டு திறனை பாதிக்கலாம். கார்கில், கந்தகார் போரின் போது நேரலையால் விபரீதங்கள் நிகழ்ந்தன. ஆகவே கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (திருத்தம்) விதிகள், 2021ன் பிரிவு 6(1)(p)ன் படி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விளக்கங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.ஆகவே அனைவரும் தேசத்தின் சேவையில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தி, கவரேஜில் விழிப்புணர்வு, உணர்திறன் மற்றும் பொறுப்பைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ராணுவ நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டாம் : ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.