சென்னை: ரிசாட்-1பி செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 மே 18ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாகியுள்ள ரிசாட்- 1பி ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப்படவுள்ளது. கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதைத்தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் உலக நாடுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இருநாடுகளும் தெரிவித்தன. இதனிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என இந்தியா அறிவித்து இருந்தது. இந்த சூழ்நிலையில் இஸ்ரோ எல்லை கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட் -1பி ஐ செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 18ம் தேதி காலை 6.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த ராக்கெட்டில் 1,710 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் பூமி கண்காணிப்பு பணியில் இந்த செயற்கைக்கோளும் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டின் பரந்த நிலப்பரப்பில் நிகழ்நேர புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும். அத்துடன், அனைத்து வானிலை தரவுகளை விண்வெளியில் இருந்து உடனுக்குடன் அனுப்பும் திறன்களை இந்த செயற்கைகோள் கொண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
* இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலின்போதும் சேட்டிலைட்டுகள் சிறப்பாக செயல்பட்டன: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவர் வி.நாராயணன் நேற்று மதியம் பெங்களூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அதன்பின்பு சென்னையில் இருந்து காரில், ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டு சென்றார். முன்னதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது ராக்கெட்டை, கடந்த ஜனவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதையடுத்து வரும் 18ம் தேதி, 101 வது ராக்கெட்டை விண்ணில் செலுத்த இருக்கிறோம். பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் மூலம் பூமியில் உள்ள பெரும்பாலனாவைகளை கண்டுபிடிக்க முடியும்.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில், தாக்குதலின்போது, நமது அனைத்து சேட்டிலைட்களும், நன்றாக சிறப்பான முறையில் வேலை செய்தன. இந்தியா தற்போது, விண்வெளி துறையில் மிகப்பெரிய அளவில் பயங்கரமாக வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. உலகத்தில் இருக்கக்கூடிய மிகச்சிறந்த கேமராவில் ஒன்று, நமக்கு நிலவில் உள்ளது. அணுசக்தி ஆராய்ச்சி துறையில், நாம் எந்த நாடு உடனும் போட்டி போடவில்லை. நம் நாட்டுக்கு, நமது மக்களுக்கு என்ன தேவையோ? அதை செய்து கொண்டிருக்கிறோம். நம் நாடு அனுப்பக்கூடிய சேட்டிலைட்கள் அனைத்தும், நம் நாட்டு மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கும், நம் நாட்டு மக்களுக்கு தேவைப்படுகின்ற சேப்டி செக்யூரிட்டி உள்ளிட்ட பாதுகாப்புக்காக தான் நாம் சேட்லைட்டுகளை விண்ணில் அனுப்புகிறோம். இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
The post ரிசாட்-1 பி செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மே 18ம் தேதி விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் appeared first on Dinakaran.