அலிகர்: உத்தரப்பிரதேசத்தின் அலிகரில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஜூஸ் விற்பனையாளருக்கு பலகோடி ரூபாய் வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களது சம்பளத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவர்கள் வருமான வரி செலுத்த தகுதியற்றவர்களாக மாறுகிறார்கள். வருமான வரி நோட்டீஸ் பெற்ற கரண்குமார்(34) எஸ்பிஐ வங்கியின் கைர் கிளையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவரது மாத சம்பளம் ரூ.15ஆயிரமாகும். இவருக்கு ரூ.33.88கோடி வருமான வரி கட்டக்கோரி நோட்டீஸ் வந்துள்ளது. இது குறித்து வருமான வரி அதிகாரிகளை அவர் சந்தித்துள்ளார். அவர்கள் இது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் சந்தவுஸ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் உள்ள மகாவீர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் கரண் பெயரில் போலி பான் கார்டு மற்றும் ஆதாரை பயன்படுத்தி பெட்ரோலிய பொருட்கள் மற்றும் ஸ்டீல் பொருட்களில் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் போக்குவரத்து நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் மோஹித் குமாருக்கு வருமான வரித்துறை மார்ச் 28ம் தேதி ரூ.3.87கோடிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர் வழக்கறிஞரை அணுகியபோது, இவரது ஆதார் அட்டையை பயன்படுத்தி எம்கே டிரேடர்ஸ் என்ற நிறுவனம் வணிகம் நடத்தி வருவதாக தெரிவித்தார். மாதந்தோறும் ரூ.8500 மட்டுமே சம்பளமாக பெற்று வரும் அவர் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் நீதிமன்றதுக்கு அருகில் உள்ள ஜூஸ் விற்பனையாளர் நாள் ஓன்றுக்கு ரூ.500-600 மட்டுமே வருமானமாக பெறுகிறார். அவருக்கு ரூ.7.79கோடி வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதால் இங்கிருந்து நடவடிக்கை எடுக்க இயலாது என அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.
The post ரூ.15 ஆயிரம் மாத சம்பளதாரருக்கு ரூ.33 கோடி வருமான வரி நோட்டீஸ் appeared first on Dinakaran.