புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீட்டில் முக்கிய கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசின் பங்களிப்பாக ரூ.16,300 கோடியும், பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடாக ரூ.18,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த இயக்கத்தின் மூலம், கனிமங்களின் ஆய்வுகளை மேம்படுத்துதல், தாதுக்களுக்கான சுரங்கம் அமைத்தல், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்தல், முக்கிய கனிமங்கள் மற்றும் அவற்றின் மறுசுழற்சியை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தின் கீழ், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் கொள்முதல் விலையை மாற்றியமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எத்தனால் விலை லிட்டருக்கு ரூ.56.58 லிருந்து ரூ.57.97 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டில், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் விளைவாக சுமார் ரூ.1,13,007 கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை சேமித்துள்ளன.
The post ரூ34,300 கோடி ஒதுக்கீட்டில் முக்கிய கனிமங்களுக்கான தேசிய இயக்கத்திற்கு ஒப்புதல்: ஒன்றிய அமைச்சரவை முடிவு appeared first on Dinakaran.