அலகாபாத்: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் ‘லிவ்-இன்’ உறவின் எல்லைகளை வகுக்க வேண்டும் என்று கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றம், குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த ஆகாஷ் கேஷ்ரி என்பவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவு கொண்டார். ஆனால் அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆகாஷ் கேஷ்ரி மீது எஸ்சி/எஸ்டி சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சாரநாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆகாஷ் கேஷ்ரி கைதான நிலையில், அவருக்கு விசாரணை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டன. அதனால் அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இம்மனு உயர் நீதிமன்ற நீதிபதி நளின் குமார் வஸ்தவா முன் விசாரணைக்கு வந்தது. அந்தப் பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘குற்றம்சாட்டப்பட்ட ஆகாஷ் கேஷ்ரி பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் உறவு கொண்டார். ஆகாஷ் கேஷ்ரியும், அந்தப் பெண்ணும் சுமார் 6 ஆண்டுகளாக லிவ்-இன் (திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்) உறவில் இருந்துள்ளனர். மேலும் லிவ்-இன் உறவில் இருக்கும் போது அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்க
வில்லை.
அத்தகைய சூழ்நிலையில், ஆகாஷ் கேஷ்ரி மீது குற்றம் சாட்டுவது நியாயமானதல்ல’ என்றார். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி நளின் குமார் வஸ்தவா, ‘லிவ்-இன் உறவை சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அத்தகைய உறவுகளால் ஈர்க்கப்படுகிறார்கள். லிவ்-இன் உறவில் இருக்கும் ஆணோ, பெண்ணோ தன்னுடன் இருப்பவருடன் விருப்பத்தின் பேரில் உறவை வைத்துக் கொள்கின்றனர். இல்லாவிட்டால் இருவரும் தங்களது உறவில் இருந்து விலக்கிக் கொள்கின்றனர்.
இத்தகைய லிவ்-இன் உறவு மீதான ஈர்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. லிவ்-இன்-ரிலேஷன்ஷிபை சமூக ரீதியாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இந்த உறவின் கட்டமைப்பு அல்லது விதிகளை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சமூகத்தின் தார்மீக விழுமியங்களைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. லிவ்-இன் உறவின் எல்லைகளை வகுக்க வேண்டிய அவசியம் உள்ளது’ என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட ஆகாஷ் கேஷ்ரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்தவொரு விதிமுறைகளும் இல்லை. ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் உறவில் இருவரும் சேர்ந்து வாழ்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் லிவ் -இன் உறவில் உள்ளவர்களின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இருவரும் லிவ்-இன் இருக்க சமமாக ஒப்புக்கொள்ள வேண்டும். பெற்றோர், நண்பர்கள் அல்லது உறவினர்கள் போன்றோர் இருவரின் உறவில் தலையிட முடியாது.
லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு குடும்ப வன்முறையிலிருந்து தங்களை பாதுகாக்கும் உரிமை உண்டு. இந்த லின் – இன் உறவின் மூலம் பிறந்த குழந்தை, முறையாக பெற்றுக் கொண்ட குழந்தை என்று அழைக்கப்படும். லிவ் -இன் உறவில் வாழும் ஜோடிகள் கேட்டுக்கொண்டால் காவல்துறை பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற விதிமுறைகளும் ஏற்கனவே வகுக்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.
The post ‘லிவ்-இன்’ உறவு மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கு; குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.