புதுடெல்லி: வக்பு திருத்த சட்டம் அமலான நிலையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஏன்? என்பது குறித்தும், காங்கிரஸ் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் தனியார் ெசய்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அப்போது ஆற்றிய உரையில், ‘இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை என்பது சாதாரண முஸ்லிம் குடும்பங்களிடமிருந்து உருவாகவில்லை, சில அடிப்படைவாதிகளாலும், சில காங்கிரஸ் தலைவர்களால் வளர்க்கப்பட்டவர்களாலும் உருவாக்கப்பட்டது. திருப்திப்படுத்தும் அரசியல் என்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. சமீபத்தில், வக்பு தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தின் மூலம் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் நடக்கும் திருப்திப்படுத்தல் அரசியலானது, அடிப்படைவாத பிரிவினைக்கு வழிவகுத்தது.
இதனால் ஏழை மற்றும் பின்தங்கிய முஸ்லிம்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெண்களை ஒடுக்க அடிப்படைவாதிகளுக்கு உரிமம் கிடைத்தது. இந்த திருப்திப்படுத்தும் அரசியல் என்பது புதிதல்ல. இதன் விதையானது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போதே விதைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், உலகின் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், எத்தனை நாடுகள் சுதந்திரத்திற்கு நிபந்தனையாக பிரிவினையை எதிர்கொண்டன? எத்தனை நாடுகள் சுதந்திரத்துடன் உடைந்தன? இந்தியாவுக்கு மட்டும் ஏன் அவ்வாறு நடந்தது? ஏனெனில், அப்போது நாட்டின் நலனுக்கு மேலாக ஆட்சி அதிகாரத்தின் மீதான ஆசை அதிகமாக இருந்தது. திருப்திப்படுத்தல் என்பது இந்தியாவின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சி இதை வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துகிறது.
கடந்த 2013ம் ஆண்டு வக்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம், முஸ்லிம் அடிப்படைவாதிகளையும் நில மாஃபியாக்களையும் திருப்திப்படுத்துவதற்கான முயற்சியாகும். இந்தச் சட்டம், அரசியலமைப்புக்கு மேலாக உள்ளது என்ற மாயையை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் அடிப்படைவாதிகளும் நில மாஃபியாக்களும் உற்சாகமடைந்தனர். ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் தடையில்லா சான்று மற்றும் சட்ட சிக்கல்களில் சிக்கியுள்ளன. கோயில்கள், தேவாலயங்கள், குருத்வாராக்கள், விவசாய நிலங்கள், அரசு நிலங்கள் எதுவாக இருந்தாலும், தங்கள் நிலம் தங்களுடையதாக இருக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. ஒரு நோட்டீஸ் வந்தால் கூட, மக்கள் தங்கள் வீடுகளுக்கும் நிலங்களுக்கும் ஆவணங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள். நீதிக்காக இருந்த அப்போதைய வக்பு சட்டம், மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியது’ என்று விமர்சித்தார்.
The post வக்பு திருத்த சட்டம் அமலான நிலையில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஏன்?.. பிரதமர் மோடி திடீர் விளக்கம் appeared first on Dinakaran.