புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும். இதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழுவில் பாஜக கூட்டணியை சேர்ந்த 16 எம்பிக்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் இடம்பெற்றிருந்தனர். கூட்டுக்குழு சார்பில் 30-க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு பரிந்துரை தொடர்பாகவும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் ஏற்கப்பட்டன.