பாட்னா: வக்பு மசோதாவிற்கு ஆதரவளித்ததால் நிதிஷ் கட்சியின் கூடாரம் காலியாகிறது. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்ததால், அக்கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் எம்.ராஜு நய்யார், மூன்று முஸ்லிம் தலைவர்கள் தப்ரேஸ் சித்திக் அலிக், முகமது ஷாநவாஸ் மாலிக், முகமது காசிம் அன்சாரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதுதொடர்பாக நிதிஷ் குமாருக்கு ராஜு நய்யார் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு ஆதரவளித்ததால் நான் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுகிறேன்.
முஸ்லிம் மக்களுக்கு எதிரான இந்த கருப்பு சட்டத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் எம்பிக்கள் வாக்களித்தது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. எனவே கட்சியின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். என்னை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அக்கட்சியின் முஸ்லீம் தலைவரான தப்ரேஸ் சித்திக் அலிக் எழுதிய கடிதத்தில், ‘முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை ஐக்கிய ஜனதா தளம் கட்சி இழந்துவிட்டது. எங்களுக்கு துரோகமிழைத்துவிட்டது’ என்று கூறியுள்ளார். மேலும் முகமது ஷாநவாஸ் மாலிக் எழுதிய கடிதத்தில், ‘எங்களைப் போன்ற லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்கள், உங்களின் மதச்சார்பற்ற சித்தாந்த கொடியை ஏந்திச் சென்றோம். ஆனால் எங்களது நம்பிக்கையை தகர்த்து விட்டீர்கள்.
அதனால் கட்சியில் இருந்து விலகுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தாண்டு இறுதியில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து, அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வருவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வரும் தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் – லோக்ஜனசக்தி கூட்டணிக்கு பெரும் சவால் உருவாகி உள்ளது.
The post வக்பு மசோதாவிற்கு ஆதரவளித்ததால் நிதிஷ் கட்சியின் கூடாரம் காலியாகிறது: மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகல் appeared first on Dinakaran.